Pushpa 2: "புஷ்பா படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப்போறாங்க" - தெலுங்கானா ஆசிரியர் சொல்வது என்ன?
Vikatan February 25, 2025 06:48 PM
'புஷ்பா-2' படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான 'புஷ்பா- 1' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான 'புஷ்பா-2' திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின்போது சில இன்னல்களைச் சந்தித்து இருந்தாலும் கிட்டத்தட்ட 1,800 கோடி வசூல் சாதனை படைத்தது.

புஷ்பா 2

அதில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் 'புஷ்பா 2' படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய் உள்ளதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாநில கல்வி ஆணையத்துடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

அதில் பேசிய அந்த ஆசிரியை, "தற்போது எல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களைக் கையாளுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் வேலை செய்யும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகள் 'புஷ்பா 2' படத்தைப் பார்த்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள். எந்த ஒரு பொறுப்பும் இன்றி அந்த படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

'புஷ்பா-2'

ஆபாசப் பேச்சு, ஏற்றுக்கொள்ளவே முடியாத ஹேர் ஸ்டைல் என அந்த படம் மோசமாக இருக்கிறது. அதைப் பார்த்து மாணவர்களும் அதே போல ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். ஆபாசமாகப் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு ஆசிரியராக நான் தோற்றது போல் உணர்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.