தமிழக பள்ளிக் கல்வித்துறையானது, அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் `வெளிநாடு கல்விச் சுற்றுலா' என்ற பெயரில் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் குறிப்பிட்ட மாணவ, மாணவிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுவருகிறது. அந்த வகையில், தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 52 பேர் மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில், 51 பேர் முதன்முறையாக விமானத்தில் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கல்விச் சுற்றுலா சென்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருப்பதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அந்தப் பதிவில், `` அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்... நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.
அப்போது "முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களைப் பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8-வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார், "தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.