பள்ளி அளவில், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உலக அளவிலும், தேசிய அல்லது மாநில அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய சுற்றுலாவுக்கு தமிழக கல்வித்துறை ஏற்பாடு செய்கிறது.
ஆண்டுதோறும் தமிழக அரசு இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், 2023-24ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஐந்து நாள் பயணமாக பிப்ரவரி 23ஆம் தேதி மலேசியாவுக்குப் புறப்பட்டனர்.ஐந்து நாள் பயணத்தின்போது மாணவர்கள் பத்து மலை முருகன் கோவில், புத்ராஜெயா, கேஎல்சிசி, கெந்திங் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவுக்கு நேற்று சென்றனர். இவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது "மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் அவர்கள்.
"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம். என பதிவிட்டுள்ளார்