விரைவில் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!
Top Tamil News February 25, 2025 12:48 PM

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு பம்பன் புதிய பாலத்தில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மேலும் மண்டபம் வரை இயக்கபடும் அனைத்து ரயில்களும் பராமரிப்பு பணிகளுக்காக காலி பெட்டிகளுடன் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் கொண்டு செல்லப்படுகின்றன. பாம்பன் புதிய பாலம் முழுமையாக போக்குவரத்துக்கு தயாராகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி பாலத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதே வேளையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்பன் பாலத்தின் திறப்பு விழா தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  இப்போது பாம்பன் பாலத்தின் சிறப்புகளை பார்ப்போம். ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலம், 1914ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த பழைய பிரிட்டிஷ் கால பாலத்துக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ளது. 

பழைய பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக ஆட்களை கொண்டு பாலம் தூக்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் மேம்பட்ட மின்-இயந்திர லிஃப்ட் பொறிமுறையால் பாலம் தூக்கப்படும். இந்தப் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும்.

புதிய பாலத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையுடன் உள்ளது. பழைய பாலத்தில் ஒரு தண்டவாளமே இருந்த நிலையில், புதிய பாலத்தில் இரண்டு தண்டவாளங்கள் உள்ளன. இதன்மூலம் ரயில்கள் மறுமுனையில் காத்திருக்க தேவையில்லாததால் போக்குவரத்து சீராக நடக்கும். தற்போது, 10 வழக்கமான மற்றும் 10 வாராந்திர சிறப்பு ரயில்கள் மண்டபம் நிலையம் வரை இயக்கப்படுகின்றன.

பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவைகள் நீட்டிக்கப்படும். ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாம்பன் புதிய பாலம் பெரிதும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.