தவெக விழாவில் பங்கேற்பதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை புரிந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை காலை 10 மணிக்கு பூஞ்சேரியில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் 120 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாவட்டத்திற்கு 15 நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது அதேபோல பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒட்டுமொத்தமாக 2500ல் இருந்து 3000 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 10 மணிக்கு மேல் தொடங்கும் விழாவில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில் தவெக விழாவில் பங்கேற்பதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை புரிந்துள்ளார். விழாவில் பிரசாந்த் கிஷோர், தேர்தலுக்கான வியூகம் , யுக்திகள், அரசியல் ரகசியங்கள் பற்றி பேச இருப்பதாகவும், அதனாலேயே இந்த விழா பொது வெளி கூட்டமாக அமையாமல் உள்ளரங்க கூட்டமாக நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.