அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, ``எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. தற்போது, மத்திய அரசு மூன்றுமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்தபோதிலும், இந்தியை கட்டாயமாக படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழக அரசு உறுதியாக நிற்கிறது.
நாம் ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில் நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை தடுக்கக்கூடிய ஒன்று. விழுப்புரம் கல்லூரியில் BA சேர வேண்டுமென்றாலும், ஒரு நுழைவுத் தேர்வு எழுதிப் பாஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும். இதனால் பணாம்பட்டு, கோலினூர் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு குறைந்து விடும்.
தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் இரண்டே போதும், மூன்றாவது மொழியாக இந்தி எதற்கு?. ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி, அதில் நாம் திறமையாக இருப்பதே முக்கியம். இந்திமீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, விருப்பமானவர்கள் அதைப் படிக்கலாம். ஆனால், அதை கட்டாயமாக்க முடியாது. நாங்கள் இருமொழிக் கொள்கையை மட்டும் ஏற்கிறோம், மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நீங்கள் அனைவரும் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா... மும்மொழிக் கொள்கை நம்மீது திணிக்கப்பட வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.