ஆதியோகி, 63 தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்!
Top Tamil News February 26, 2025 12:48 PM

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவாங்கா பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு ‘சிவயாத்திரை’ எனும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, மைசூர், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 

இதில் சென்னையில் இருந்து வந்த சிவயாத்திரை குழு அறுபத்து மூவர் திருமேனிகளை தாங்கிய ஒரு பிரத்யேக தேரினையும் இழுத்து வந்தனர். ஆதியோகி தேர்கள் அனைத்தும் கலைநயம் மிக்க சிற்பங்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மரத்தினால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சிவயாத்திரை குழுக்கள் அனைத்தும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று காலை வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.