வங்கிகளில் நகை கடன் வாங்கியுள்ளீர்களா? முக்கிய வசதிக்கு ரிசர்வ் வங்கி தடை..!
Tamil Minutes February 28, 2025 09:48 PM

 

வங்கிகளில் நகை கடன் வாங்கியவர்களுக்கு இருந்த ஒரு முக்கிய வசதி தடை செய்யப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வங்கியில் நகைகளை வைத்து கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக, வங்கியில் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வாங்கும் ஏழை எளிய மக்கள், அவகாசம் முடிந்தாலும் வட்டி மட்டும் கட்டி, அதை மறு அடமானம் வைத்து கடன் தொடர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வசதிக்கு ரிசர்வ் வங்கி தற்போது தடை விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய விதிமுறை, ₹10,000 முதல் லட்சக்கணக்கில் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நகை கடன் வாங்கியவர்கள், அவகாசம் முடிந்ததும் முழு கடனையும் செலுத்திய பிறகு மீண்டும் புதிதாக அடகு வைக்க முடியும் என்றும், அதுவும் மறுநாள் தான் அடகு வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் பணம் அவசர தேவைக்காக வங்கிகளில் அடமானம் வைக்கின்றனர். ஆனால், கடனை முழுவதுமாக செலுத்திய பிறகே மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற புதிய விதிமுறை, அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இதற்கு முன்பு, வட்டி மட்டும் கட்டி, அவகாசம் முடிந்த பின்னரும் மறு அடமானம் வைக்கும் வசதி இருந்தது. ஆனால், தற்போது இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், கடன் வழங்குதலில் உள்ள வெளிப்படை தன்மையை உயர்த்துவதற்கும், சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இனி பொதுமக்கள் வங்கிகளை நம்பாமல் தனியாரிடம் அடகு வைப்பது அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.