உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லித்தர இந்த வழிகளை டிரை பண்ணுங்க
GH News February 28, 2025 10:10 PM

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்லவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் மிக முக்கியமான கடமை ஆகும். சிறு வயதில் நாம் கற்றுக் கொடுக்கும் பழக்கங்கள் தான் அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமைய உதவும். ஆனால் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பது என்பது ஒரு சிக்கலான, சவாலான பணியாகும். ஆனால் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து, நாம் சொல்லுவதை அவர்களை கேட்க வைப்பதால் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு சில டிப்ஸ் இதோ...

1. முன்னுதாரணமாக இருங்கள் :

குழந்தைகள் நம்மை பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே, அவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டியது அவசியம். சுத்தமாக இருப்பது, நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, மற்றவர்களிடம் குறிப்பாக பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உதவி செய்வது, மரியாதையாக பேசுவது ஆகியவற்றை நாம் வார்த்தைகளில் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பதை விட, செயல்கள் மூலம் வெளிப்படுத்துவது அவர்களையும் அதை பின்பற்ற வைக்கும். 

2. நேரத்தை நிர்வகித்தல் :

குழந்தைகள் சிறு வயதிலேயே நேரப் பயன்பாட்டை கற்றுக் கொண்டால், அவர்கள் எதிர்காலத்தில் ஒழுங்காக வளர்ந்து பல விஷயங்களையும் திறம்பட செய்வதற்கு உதவியாக இருக்கும். ஒரு டைம் டேபிள் (Time Table) அமைத்து, அவர்கள் தினசரி வழக்கங்களை முறையாக செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள செயல்களில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதன் அவசியத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

3. சுயபொறுப்பை வளர்த்திடுங்கள்:

பள்ளி முதல் வேலை வரை, குழந்தைகளுக்கு தன்னைத் தானே பொறுப்பேற்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை நெறியை, பொறுப்புணர்ச்சியை உணர்ந்து செயல்படக் கூடியவர்கள் ஆக  வளர்வார்கள். சுயமாக பாடங்களை படிக்க, சிறிய வீட்டு வேலைகளை செய்ய, தன் பொருட்களை சரியாக வைத்திருக்க பழக்கப்படுத்துங்கள். அவர்கள் தவறு செய்தால், அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள ஊக்குவியுங்கள். கடுமையாக நடந்து கொள்வதையும், தண்டனை கொடுப்பதையும் தவிருங்கள். "உங்கள் செய்கைகளுக்கு நீங்களே பொறுப்பு!" என அவர்களுக்கு புரிய வையுங்கள். 

4. புத்தக வாசிப்பின் பழக்கம் : 

குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தினால், அவர்களின் சிந்தனை திறன், மூளையின் செயல்பாடு, படைப்பாற்றல் ஆகியவை அதிகரிக்கும். தினசரி 15-20 நிமிடங்கள் கதைகள் அல்லது தகவல் புத்தகங்களைப் படிக்கச் செய்யுங்கள். அவர்களிடம் புத்தகங்களைப் பற்றிப் பேசுங்கள், இதனால் அவர்கள் அதன் உண்மையான மதிப்பைக் புரிந்து கொள்வார்கள். மொபைல் மற்றும் டிவி நேரத்தை குறைத்து, வாசிப்பு நேரத்தை அதிகரியுங்கள்.

5. மரியாதை மற்றும் இரக்க கற்பிக்கவும் : 

want to teach your children good habits try these useful tips

சுற்றி இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மரியாதையுடன் நடத்துதல் மற்றும் இரக்க உணர்வு குழந்தைகளின் நல்ல உறவுகள் மற்றும் சமுதாயத்துடனான இணைப்பை வலுப்படுத்தும். வீட்டிற்கு வருபவர்கள், முதியவர்கள், விலங்குகளை, இயற்கையை, பிற மனிதர்களை அன்புடன் நடத்த பழக்கப்படுத்துங்கள். "மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதே உங்கள் உண்மையான மனிதநேயத்தின் சான்று. மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும்!" என்பதை கற்றுக் கொடுங்கள்.

6. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் :

சிறுவயதிலேயே சத்தான உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்தால், அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். அதிகம் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்த்து, நாட்டு உணவுகளை அதிகம் உண்ண ஊக்குவியுங்கள். தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிட வைக்கவும். நீரைக் குறைந்தது 7-8 கிளாஸ்கள் குடிக்க வைக்க பழக்கப்படுத்துங்கள்.

7. "நன்றி" சொல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள் :

நன்றி சொல்லுதல் என்பது ஒரு வெளிப்படையான மரியாதை மற்றும் மனநிறைவு அளிக்கும் பழக்கமாகும். இது அவர்களது உறவுகளை வலுப்படுத்தும்.
குழந்தைகளுக்கு நன்றி சொல்லும் கலாச்சாரத்தை வளர்க்கச் செய்யுங்கள். பிறர் உதவிக்கரமாக நடந்துகொண்டால், "நன்றி" சொல்லக் கற்றுக் கொள்கிறார்களா என்று கவனிக்கவும்.

8. விட்டுக் கொடுக்கும் பழக்கம் :

நண்பர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்வது, மன்னிக்கும் மனப்பான்மை, பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது ஆகிய பழக்கங்களை கற்றுக் கொடுங்கள். போட்டி, தேர்வுகளில் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்தால் அவர்களின் முயற்சியை பாராட்டி, குறைகளை சரி செய்து, அடுத்த முயற்சியில் வெற்றி அடைய, முன்னேற ஊக்கப்படுத்துங்கள். 

கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவை :

* குழந்தைகளை மாற்ற நினைக்காதீர்கள் அவர்களை வழிநடத்துங்கள்.
* அவர்கள் செய்யும் சிறு முயற்சிகளையும் பாராட்டுங்கள்.
* அன்புடனும் பொறுமையுடனும் கற்றுக் கொடுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.