நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இந்த கோழிப்பண்ணைகளில் இருந்து சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் ஆறு கோடி முட்டைகள் கிடைக்கின்றன.
இந்த மாவட்டத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ரூ.5.90 ஆக இருந்தது. இதனால், கடைகளில் ரூ.7-க்கு சில்லறை விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, தற்போது ஆந்திரா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் பொதுமக்களிடம் முட்டை நுகர்வு குறைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைப்பது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், ரூ.4.90-ல் இருந்து ரூ.4.60 ஆக முட்டை விலை குறைந்தது.
மேலும், தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடைகளில் முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு முட்டை ரூ.5 முதல் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.