கலெக்டர், எஸ்பி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்: திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு..!
Webdunia Tamil February 28, 2025 11:48 PM

தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தர்மசெல்வன் பேசிய ஒரு சர்ச்சை கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தர்மபுரியில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், "கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் எந்த அதிகாரியும் அந்த பதவியில் இருக்க மாட்டார்கள்.

நாங்கள் கடிதம் கொடுத்தால் மட்டுமே அதிகாரிகள் மாற்றப்படுவர். இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த அதிகாரியும் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. விளையாடுவதற்கு இது இடம் அல்ல, என்னிடம் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அவர்களின் கதையே முடிந்துவிடும்" என்று கூறினார்.

மேலும் "தலைவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அதிகாரிகள் என் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பேச்சு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் கூறியதாவது: திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன.

தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது.

ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.