பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!
Dhinasari Tamil March 01, 2025 02:48 AM

#featured_image %name%

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தவறு இருப்பதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய இளவயது நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிப்.28 வெள்ளி இன்று நடைபெற்ற போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகா பாரதி பேசியபோது,  கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தில் அந்தக் குழந்தையே தப்பா நடந்திருக்கிறது. அது நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். எனக்குக் கிடைச்ச ரிப்போர்ட்படி, காலையில் அந்தப் பையன் முகத்தில் குழந்தை துப்பி இருக்கிறது. அதுதான் காரணம். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தடுப்பு தான் முக்கியம். பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – என்று பேசினார்.  

ஆட்சியரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மூன்றரை வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று, அக்குழந்தை தவறு செய்திருக்கிறது என்றும், எச்சில் துப்பியதால் பதிலுக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறி, குற்றத்தை நியாயப் படுத்தலாமா என்றும் சமூகத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பினர். மேலும், பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாப்பா பாட்டு பாடிய பாரதியின் பெயரைப் பாதியாக வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியர் மகா பாரதி, இவ்வாறு எச்சில் துப்பியதால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, அதுவும் ஒரு சிறுகுழந்தையைக் கை காட்டிப் பேசுவது அறிவுக்கு உகந்த செயலா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். 

இதனிடையே, தனது பேச்சினால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ‘குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அவ்வாறு பேசியதாக’ ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர்,  அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். 

விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார் – என்று குறிப்பிட்டார். 

இதை அடுத்து, மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிய ஆட்சியராக ஶ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.