நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டின் கேட்டில் போலீஸார் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர், அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்ட விவகாரம் பிரச்சனையானது. அதில், சீமான் வீட்டின் பாதுகாவலரை போலீஸார் காரில் ஏற்றிச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து, தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கூறினார்.
பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை வந்திறங்கினார். சென்னை வந்ததும், வடபழனி தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்ததும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக மாலை 7:30 மணியளவில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து காரில் புறப்பட்டார்.
மறுபக்கம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினரை தடுக்கும் வண்ணம், காவல் நிலையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் ஆஜரான பிறகு விசாரணையில் அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று நள்ளிரவு தாண்டி விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் மனைவியும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.