பாசிசமா, பாயாசமா என்று ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இது மிகவும் ஆபத்தானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில், நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'தளபதி 72' எனும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, “பாசிசமா, பாயாசமா என்று ஒருவர் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இது மிகவும் ஆபத்தானது. இவர்களெல்லாம் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து” என்றார்.
இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாயாசம் என்கிறார்கள். சின்னப்பிள்ளைகள் அப்படித்தான் பேசும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஹிட்லர் பற்றி படித்து, பாசிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் பேசிய மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, “கூட்டாட்சி தத்துவத்திற்கு ஊறு நேரும்போதெல்லாம் முதல் போர் குரலை கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்
இந்திய அரசியலின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.. உரிமைகளை மீட்பதில் இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக செயல்படுகிறார்” என புகழாரம் சூட்டினார்.