சீமான் ஆஜராக உள்ள நிலையில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
விஜயலட்சுமி குறித்த விசாரணைக்கு மாலை 6 மணிக்கு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாராவார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இன்று ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி இன்று மாலை ஆறு மணிக்கு சீமான் நேரில் ஆஜராவதாக எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமராக்கள் கண்காணிக்கும் வகையிலான மொபைல் கேமரா கண்ட்ரோல் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடந்தால் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் இருமர்க்கத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இணை ஆணையர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.