ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது பாட்டியின் வங்கி கணக்கில் நிறைய பணம் இருப்பதாகவும், தான் அதை நெட் பேங்கிங் மூலம் பயன்படுத்தி செலவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மாணவி கூறியதை கேட்ட சக மாணவன் ஒருவன் அதனை தனது வீட்டில் உள்ள சகோதரனிடம் கூறியுள்ளான்.
உடனே அந்த சகோதரன் அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார். இதற்காக அவர் தனது நண்பர்களின் உதவியுடன் அந்த சிறுமியிடம் சமூக வலைதளம் மூலமாக நண்பனாக பழகி பேசி புகைப்படத்தை வாங்கியுள்ளார். அதன்பின் அதனை மார்பிங் செய்து அந்த பெண்ணிடம் மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் இருந்து ரூ 1000 முதல் 1 லட்சத்திற்கும் மேல் வாங்கியுள்ளார்.
இதனால் அந்த பெண் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை தன்னுடைய பாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து வங்கி கணக்கில் பணம் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் சிறுமியின் டியூஷனுக்கு சென்று மிரட்டி வந்துள்ளார். இதனை கண்ட டியூஷன் ஆசிரியர் சிறுமியிடம் விசாரித்த நிலையில் உண்மை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இச்செய்தி சிறுமியின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியான நவீனும் அடங்குவார். மேலும் இதுவரை அந்த சிறுமியிடமிருந்து மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ 36 லட்சத்தை மீட்டுள்ளனர்.