''ராக்கெட் கூட செலுத்தலாம், ஆனால் எலான் மஸ்கால் இந்தியாவில் சாதிக்க முடியாது'' சஜ்ஜன் ஜிண்டால்..!
Seithipunal Tamil March 07, 2025 08:48 AM

மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக இந்தியாவில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், வரி விகிதம் காரணமாக டெஸ்லா நிறுவனம் பின் வாங்கியது

இந்நிலையில், கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்த்துள்ளது. அத்துடன், குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் இந்திய அரசு தெரிவித்திருந்தது. 

இதற்கிடையில் அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, 02 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி ஸ்பேஸ் எக்ஸ் , எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சாதிக்க முடியாது என்று ஜிண்டல் குழும நிர்வாக இயக்குநர் சாஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சாஜ்ஜன் ஜிண்டால், "எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தால் இந்தியாவில் சாதிக்க முடியாது. ஏனெனில் இந்தியர்களான நாங்கள் இருக்கிறோம். இங்கு டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அவைகளை பின்னுக்குத் தள்ளி டெஸ்லாவால் ஒருபோதும் சாதிக்க முடியாது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். அவர் பல பிரமிக்கத்தக்கச் செயல்களைச் செய்யலாம். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ராக்கெட் கூட செலுத்தலாம். ஆனால், இங்கு அவரால் சாதிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.