உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி, 30 பேர் படுகாயம்..!
Seithipunal Tamil March 09, 2025 09:48 AM

உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபில்லியா மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு,30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:

''அமெரிக்கா உக்ரைனுக்கான புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் ராணுவ உதவியை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோப்ரோபில்லியா உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

எட்டு மாடி கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கார்கிவ் பகுதியில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதல்கள் காரணமாக உக்ரைனின் பொது மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் மாறாத போர் நோக்கங்களை எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

அத்துடன் அவர் வலுவான வான் பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், புடினுக்கு போருக்கு நிதியளிக்க உதவும் அனைத்தும் சரிந்து விட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

அத்துடன், உக்ரைனிற்கான ராணுவ மற்றும் உளவுத்துறை உதவியை அமெரிக்கா இடைநிறுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, உக்ரைனின் எரிசக்தி மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்த ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளை ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தலைவர்களுடன் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களையும், சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் உயர்மட்ட சந்திப்பையும் அவர் அறிவித்த்துள்ளார். 

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் மற்றும் அமைதித் தீர்வை வலியுறுத்துவதற்காக ரஷ்யா மீது பெரிய அளவிலான வங்கித் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.