மத்திய பிரதேசத்தில் முகலாயர் காலத்து தங்கப்புதையல்; இரவு பகலாக வயல்களை தோண்டும் கிராமவாசிகள்! பாலிவூட் படத்தால் வந்த வினை..!
Seithipunal Tamil March 09, 2025 09:48 AM

பாலிவுட் படத்தில் குறிப்பிடப்பட்டதை நம்பி முகலாயர் ஆட்சிக்காலத்தில் தங்கம் புதைக்கப்பட்டதாக மத்திய பிரதேசத்தில், ஒரு கிராமத்தில் நுாற்றுக்கணக்கான பேர், இரவோடு இரவாக தங்க புதியலுக்காக வயல்வெளிகளை தோண்டும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் திரைப்படமான 'சாவா' திரைக்கு வந்தது. இந்த படத்தில் விக்கி கவுஷால், ராஷ்மிகா மந்தனா, அக்சய் கன்னா நடித்த படத்தில்,ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த பட திரைக்கதையில் முகலாயர் காலத்து தங்கப்புதையல் இருப்பதாக கூறி, ம.பி., மாநிலம் ஆசிர்கர் கோட்டையை காட்டியிருந்தனர்.

இந்த படத்தை பார்த்துவிட்டு இது கூறியிருப்பதை உண்மை என்று  கிராமத்தினர் நம்பியுள்ளனர். இதனால் மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசிர்கர் கோட்டை அருகே வயல்களில் கிராம மக்கள் தோண்ட ஆரம்பித்தனர். நுாற்றுக்கணக்கான பேர், இரவு பகலாக கிராமத்தில் இருக்கும் பொது இடம் மற்றும் வயல்வெளிகளை எல்லாம் தோண்ட ஆரம்பித்தமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள் டார்ச் விளக்கு, கடப்பாரை, மண்வெட்டியுடன் மண் தோண்டுவதும், சலிப்பதுமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன. தோண்டிய சிலர் தங்க நாணயங்களை எடுத்து விட்டதாகவும், ஊருக்குள் வதந்திகள் பரவியுள்ளன.

இது குறித்து, உள்ளூர்வாசியான வாசிம் கான் கூறுகையில், ''கிராம மக்கள் தங்கள் வயல்களை தோண்டுவதால் நில உரிமையாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஆசிர்கர் புதையல் வேட்டைக்காரர்களால் எந்நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது. யாருக்கும் தங்கம் கிடைத்ததாக தகவல் இல்லை. ஆனாலும் மக்கள் அதிக அளவில் கூடிவருகிறார்கள், மேலும் தோண்டும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது,'' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், புர்ஹான்பூர் எஸ்.பி., தேவேந்திர பட்டிதார் கூறியதாவது: 'இந்த நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் தங்கம் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புவியியலாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த இடத்தை பரிசோதித்து, மண்ணில் தங்கத்தின் எந்த அடையாளமும் இல்லை என உறுதிப்படுத்தினர்.' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமவாசிகளை அடிப்படையற்ற வதந்திகளுக்கு பலியாகாதீர்கள் என்றும், இத்தகைய கட்டுப்பாடற்ற தோண்டுதல் ஆபத்தானது மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று  தேவந்திர பட்டிதார் கூறியுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.