மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!
Vikatan March 10, 2025 02:48 AM

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயிலில் ஏறி இறங்கவேண்டும். சில நேரங்களில் இறங்கவேண்டியவர்கள் இறங்க முடியாமல் அடுத்த ரயில் நிலையத்திற்கு சென்ற சம்பவங்கள் நடப்பதுண்டு. ரயில் புறப்படும் போது ஏற முயன்று கீழே விழுந்து பயணிகள் உயிரிழப்பதும் அதிகமாக நடக்கிறது. மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அந்நேரம் அவரது பிடிதளர்ந்து கீழே விழுந்து ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டார். அந்நேரம் அருகில் நின்ற ரயில்வே பாதுகாப்புபடை வீரர் விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை வெளியில் இழுத்து காப்பாற்றினார்.

சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும் அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சகம் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது. அதோடு ரயில் செல்லும்போது ஏறவோ இறக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவை பார்த்து பலரும் ரயில்வே போலீஸாரின் பணியை பாராட்டியுள்ளனர். சிலர் இது போன்ற சம்பவங்களை தடுக்க தானியங்கி கதவுகளை பொருத்தும்படி தெரிவித்துள்ளனர். சிலர் இது போன்ற காரியத்தில் ஈடுபடும் ரயில்வே போலீஸாரை சம்மானம் கொடுத்து கெளரவிக்கவேண்டும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள போரிவலி ரயில் நிலையம் எப்போதும் மிகவும் பிஸியாகவே காணப்படும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.