Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்
Vikatan March 10, 2025 02:48 AM

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸார் ரோந்து சென்றனர். இய்யாடன் ஷானித்தை கண்ட போலீஸார் ஜீப்பை நிறுத்தினர். இதையடுத்து அவர் தன்னிடம் இருந்த எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் அடங்கிய பாக்கெட்டை விழுங்கியதுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். போலீஸார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னிடம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இருந்ததாகவும், அதை விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்தான் ஷானித்.

ஷானித்திடம் போலீஸ் விசாரணை

இதையடுத்து அவரை தாமரசேரி அரசு தாலுகா மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்ததில் எம்.டி.எம்.ஏ பாக்கெட்டை விழுங்கியது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு எண்டோஸ்கோப்பி எடுத்ததில் அவரது வயிற்றில் பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.சி.யு-வில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஷானித் நேற்று மரணமடைந்தார்.

இந்த நிலையில் இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில் 3 கவர்கள் இருந்ததாகவும், அதில் 2 கவர்களில் உப்புத்துண்டுகள் போன்று இருப்பதாகவும்,  மற்றொரு கவரில் இலை போன்று இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இளைஞர் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவை விற்பனைக்காக வைத்திருக்கலாம் எனவும். போலீஸாரைக் கண்டதும் ஆதாரங்கள் சிக்கக்கூடாது என்பதற்காக போதைப்பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகளை விழுங்கியதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எம்.டி.எம்.ஏ விழுங்கியதால் இறந்த ஷானித்

தாமரச்சேரி தாசில்தார் மற்றும் குந்நமங்கலம் ஜூடிசியல் மஜுஸ்திரேட் முன்னிலையில் இதுகுறித்து பேராம்பிற டி.எஸ்.பி விசாரணை நடத்தி வருகிறார். எம்.டி.எம்.ஏ உடலில் கலந்ததால் மரணம் நேரிட்டதா என்பது பிரேதபரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷானித்துடன் தொடர்பில் இருந்தவர்களிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.