காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை, நீங்கள் மும்மொழிக் கொள்கை பற்றி பேசும் போது, உங்களிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி – தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி முறை கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகம் பல வடமாநிலங்களை விட கல்வியில் முன்னிலையில் இருக்கும்போது, தோல்வியடைந்த கல்விமுறைகளை நம்மீது கட்டாயமாகத் திணிப்பதன் நோக்கம் என்ன?
நீங்கள் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு, UPSC தேர்வை இழுத்துக்கொண்டு வந்தது நீங்கள். மும்மொழிக் கொள்கை என்பது வடமாநிலங்களை முன்னேற்றம் அடைய செய்யும் திட்டம் அல்ல. அது மொழித் திணிப்பு, அதன் வழியே கலாச்சார ஒழிப்பு என்ற பயங்கர செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே!
இப்போது UPSC தேர்வைப் பற்றி பேசலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக கல்விக் கொள்கையில் எந்த முக்கியமான மாற்றங்களும் இல்லை. ஆனால், தமிழக மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஏன் மோசமாகக் குறைந்தது? இதற்கு பதில் ஒரே ஒன்று – மோடியின் அரசு தமிழகத்தையும் மற்ற பிற இந்தி பேசா மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கேற்ப மாற்றிவிட்டது என்று கூறினார்.