தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார்.
பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த ஆணவக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 8 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் இன்று (மார்ச் 10) தீர்ப்பு வழங்கியது.
பரபரப்பை ஏற்படுத்திய பிரனாய் கொலை வழக்கில் நல்கொண்டா எஸ்சி/எஸ்டி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி எண் 2 (ஏ2) ஆக பட்டியலிடப்பட்ட சுபாஷ் சர்மாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த குற்றவாளி சுபாஷ் சர்மா, இந்தக் கொலையைச் செய்ததாகக் கண்டறியப்பட்டார்.
கூடுதலாக, மீதமுள்ள குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்டபோது, குற்றவாளிகள் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டு, தங்களுக்கு குடும்பங்கள் இருப்பதாகவும், குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் வாதிட்டனர். அம்ருதாவின் மாமா ஷ்ரவன் குமார், இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனக்கு திருமணமாகாத மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதான குற்றவாளி (A1) மற்றும் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், மார்ச் 2020 இல் தற்கொலை செய்து கொண்டார்.