தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம் ஈசநத்தத்தை அடுத்த அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் மாணவி, தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். பொன்நகர் பேருந்து நிறுத்ததில் இறங்கிய அந்த மாணவி சக மாணவிகள் 3 பேருடன் கல்லூரி நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கே திடீரென ஆம்னி வேனுடன் தயாராக இருந்த இளைஞர் மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கடத்திச் சென்றதாக சக மாணவிகள் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர். உடனே அருகில் இருந்த சக மாணவிகள் கத்தில் கூச்சலிட்டதை அடுத்து ஆம்னி வேன் வேகமாக சென்று விட்டதாக தெரிகிறது இச்சம்பவம் குறித்து கடத்தப்பட்ட மாணவியுடன் வந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தப்பட்ட மாணவியை, அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அந்த இளைஞர் மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும், அதனை நீக்கும் படி கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் அந்த இளைஞரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து, அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் வந்து கல்லூரி மாணவியை கடத்தியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சக மாணவிகள் வேனின் பதிவு எண்ணை கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட எல்லைகள், காவல் நிலைய எல்லைகளில் செக்போஸ்ட்கள் அமைத்து மாணவியை தேடி வருகின்றனர்.