திருவண்ணாமலையில் சூதாட்டத்திற்கு வட்டிக்கு பணம் கொடுத்து மறைந்து வாழ்ந்த ரவுடி வெட்டிக்கொலை
Top Tamil News March 11, 2025 01:48 AM

புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி திருவண்ணாமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40). புதுச்சேரியில் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு, விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுச்சேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. புதுச்சேரியின் சரித்திர குற்ற பதிவேட்டு பட்டியலில் உள்ள ஐயப்பன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிச்சேரி காவல்துறையினரின் கெடுபிடியால் தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் என்றும், இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் மோப்பநாய் வீரா வர வழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இதுகுறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  முதற்கட்ட விசாரணையில் தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த புதுச்சேரியை சேர்ந்த பிரபல குற்றவாளி ஐயப்பன், தினம்தோறும் திருவண்ணாமலை அடுத்த வேலையாம்பாக்கம் கிராமத்தில் சூது விளையாடி வந்ததாகவும் , மேலும் பைனான்சியர் என்பதால் அங்கு சூது விளையாடுபவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்ததாகவும் தகவல் தெரிகிறது.

பிரபல குற்றவாளியான ஐயப்பனின் நெருங்கிய நண்பர்கள் சந்துரு மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு ஐயப்பன் பணம் ரூபாய் மூன்று லட்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் இது தொடர்பாக அவர்களுக்குள் பல்வேறு முறை வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் இவர் வேலையாம்பாக்கம் கிராமத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பொழுது இதனை அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பனின் நண்பர்கள் சந்துரு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நேற்று இரவு வேளையாம்பாக்கத்திற்கு இன்னோவா காரில் வந்து ஐயப்பனை கத்தி முனையில் கடத்தி சென்று நீலன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை கோடி பகுதியில் சரமாரியாக வெட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேட்டவலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடிய இருவரை தீவிரமாகவும் தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சிலர் சிக்குவார்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.