வெறும் 150 ரூபாய் பணத்திற்காக ஒருவரை கொலை செய்து அவரது உடலை எரிந்த கொலையாளிகளில்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்திய நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் பாரதி நகரில் மளிகை கடை நடத்தி வந்தார். தினமும் காலையில் கடைக்கு வந்து விட்டு இரவு மொபட்டில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள கவிமணி நகர் வழியாக வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஏழாம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். ஆனால் அவர் வீடு சென்று சேரவில்லை. மறுநாள் காலையில் அதே பகுதியில் உள்ள பாண்டியன் வீதியை ஒட்டி உள்ள குறுக்கு பாதையில் வேலு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு எரித்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்தும் மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு ஸ்டாலின் மற்றும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வேலுவின் சகோதரர் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கவிணி நகர் பாரதி நகர், பாண்டியன் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலை நடந்த பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்த காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணயில் இந்த கொலையில் ஆரல்வாய்மொழி திருமலைபுரத்தை சேர்ந்த சுதன் (26)என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த சுதன் தலைமறைவானார்.
இந்த நிலையில் நேற்று சுதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது போலீஸாரிடம் இருந்து தப்பி செல்லும் பொழுது ஓடையில் தவறி விழுந்ததில் கொலையாளி சுதனுக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்த போலீஸார், அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவு கெட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மற்றொரு இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். வேலுவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுதன் மீது ஏற்கனவே கோட்டார் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளன. இதுமட்டுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மது போதையில் ஏற்பட்ட தகராறில் சுதன் தனது நண்டன் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்த வழக்கும் அவர் மீது உள்ளது. தனது நண்பனை ஏற்கனவே கொலை செய்த வழக்கில் உள்ள சுதன் தற்பொழுது ரூ.150-க்காக வேலுவை கொலை செய்துள்ளார், அவர் மது குடிக்க ரூ.150 கேட்டுள்ளார். வேலு கொடுக்க மறுக்கவே, அவர் கடையிலிருந்து வீடு திரும்பும்போது அவர் பையில் இருந்து ரூ.150 எடுத்துக்கொண்டு, அதில் ரூ.50க்கு பெட்ரோல் வாங்கி வேலுவின் உடலை எரித்துள்ளனர்.