இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர்.
பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார்.
கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது?
பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது.
இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது.
அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன்.
அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள்.
யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள்.
அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது,
'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள்.
ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள்.
இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.
கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது?
பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள்.
அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.
அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது.
நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது.
அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம்.
அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்.
கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா?
பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது.
ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை.
ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை.
கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.
இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா?
பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது.
ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது.
ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது.
அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன்.
ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார்.
தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது.
அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால்.
அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான்.
கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன?
பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம்.
இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள்.
இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது.
எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு.
மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது?
பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும்.
இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள்.
இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம்.
இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம்.
மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள்.
கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள்.
இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும்.
கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது.
அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் , , (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)