பாகிஸ்தான் ரயில் கடத்தலில் 104 பேர் மீட்பு, 16 ஆயுதக் குழுவினர் சுட்டுக் கொலை - என்ன நடக்கிறது?
BBC Tamil March 12, 2025 01:48 PM
Mazhar Chandio/Anadolu via Getty Images

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு கூறியுள்ளது.

இதற்கிடையில், பெண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 104 மீட்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவிப்பதாக பிபிசி உருது செய்தி கூறுகிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதக்குழுவைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 80 பயணிகள் மச் ரயில் நிலையம் வந்தடைந்ததாகவும், அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயிலில் பயணித்த பல பயணிகளை தீவிரவாதிகள் மலைப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று பாகிஸ்தான் உள்துறை இணை அமைச்சர் தலால் சௌத்ரி நேற்று தெரிவித்தார்.

ரயிலின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் காவல்துறை நேற்று தெரிவித்தது.

பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலூசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்நாட்டு ஊடகமான 'டான்' ஊடகத்திடம், ரயிலில் "கடும் துப்பாக்கிச் சூடு" நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பல பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளதாகவும், அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் "தீவிரமான விளைவுகள்" ஏற்படும் என்றும் பி.எல்.ஏ எச்சரித்துள்ளது.

இருப்பினும், பணயக் கைதியாக யாராவது பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

Getty Images குவெட்டாவில் ரயில் ஒன்றில் நிற்கும் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி (கோப்புப் படம்)

குவெட்டா ரயில்வே துறை கட்டுப்பாட்டு அதிகாரி முகமது காஷிப் பிபிசியிடம் கூறுகையில், 400-450 பயணிகள் அந்த ரயிலில் பயணிக்கப் பதிவு செய்து இருந்ததாகவும் யாராவது பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து எவ்வித உறுதியான தகவலும் சுயாதீனமாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

சிபி மாவட்ட எல்லையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், "மலைகள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் அந்த ரயில் நின்றுவிட்டதாக" ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மோசின் நவாஸ், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரயிலில் உள்ள எவரிடமும் அதிகாரிகள் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இணைய வசதியோ மொபைல் நெட்வொர்க் வசதியோ இல்லை என அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பலூசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இயற்கை வளம் மிகுந்த இந்த மாகாணம், அதிக வளர்ச்சியடையாத பகுதியாகும்.

EPA

பலூச் விடுதலைப் படை அப்பகுதியில் சுதந்திரம் பெறுவதற்காகப் பல்லாண்டுக் காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது, பல மோசமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. காவல் நிலையங்கள், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை இலக்கு வைத்துள்ளது.

ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், சிப்பி மருத்துவமனையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நிவாரண ரயில், ரயில்வே துறையால் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலைப்பாங்கான மற்றும் அணுக முடியாத பகுதி என்பதால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமங்கள் உள்ளதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் டாக்டர் வசீம் பெக் பிபிசியிடம் தெரிவித்தார். சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை ஊழியர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

"சிப்பி மருத்துவமனையில் 100 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது. ஆனால் பலத்த காயமடைந்தவர்கள் குவெட்டாவுக்கு அனுப்பப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.

ஜாஃபர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் குவெட்டா ரயில் நிலையத்தில் உள்ள கவுன்டரில் இருந்து தகவல்களைப் பெற முயல்கின்றனர்.

இன்று காலையில், குவெட்டாவில் இருந்து லாகூருக்கு புறப்பட்ட பயணியான முகமது அஷ்ரஃபின் மகன் பிற்பகல் 2 மணி முதல் தனது தந்தையைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பலுசிஸ்தான் விடுதலைப் படையின் நோக்கம் என்ன? Getty Images

பலுசிஸ்தான் மக்கள், இந்தியா – பாகிஸ்தான் பிரிவிணையின்போது தங்களை ஒரு சுதந்திர நாடாக இருக்க விரும்பினாலும், தாங்கள் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாக நம்புகிறார்கள்.

ஆகையால், இந்த மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்தது. அது இன்னும் தொடர்ந்து வருகிறது.

பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரிப் பல பிரிவினைவாத குழுக்கள் தற்போது தீவிரமாக உள்ளன. அவற்றில் பழமையான, செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்று பாகிஸ்தான் விடுதலை ராணுவம். இந்த அமைப்பு முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் உருவானதாக நம்பப்படுகிறது.

சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலூச் மக்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆனால், ராணுவ சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு, பலூச் தேசியவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிந்த பிறகு, பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும் காணாமல் போனது.

பின்னர் இந்தக் குழு, 2000ஆம் ஆண்டில் மீண்டும் செயல்பட்டது. இந்த ஆண்டு பி.எல்.ஏ அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த அமைப்பில் பெரும்பாலும் மாரி மற்றும் புக்தி பழங்குடியினர் உள்ளனர். மேலும், இவர்கள் பிராந்திய சுயாட்சிக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

சர்தார் அக்பர் கான் புக்தி பலுசிஸ்தானின் முன்னாள் தலைவராக இருந்தார். அவர் பலூச் விடுதலை ராணுவத்தின் மிக மூத்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆகஸ்ட் 26, 2006 அன்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், நவாப் கைர் பக்ஷ் மிரியின் மகன் நவாப்சாதா பலாச் மிரி, அதிகாரிகளால் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2007இல், பலாச் மிரியின் மரணச் செய்தியும் வந்தது.

இந்த ஆண்டு, பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

கூடுதல் தகவல்கள்: உஸ்மான் ஸாஹித் மற்றும் பிபிசி உருது சேவை

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் , , (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.