மாங்கல்ய பலம் தரும் மாசி மகம்... எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்?!
Dinamaalai March 12, 2025 12:48 PM

மாசி கயிறு பாசி படியாது என்பார்கள். இன்று மாசி மக தினத்தில் இதைச் செய்ய மறக்காதீங்க. பொதுவாகவே பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய மாதமாக மாசி மாதம் பார்க்கப்படுகிறது. அதனால் தான் மாசி மாதத்தை மகத்துவங்கள் நிறைந்த மாதம் என்கிறார்கள். இந்த மாதத்தில் நம்முடைய வழிபாடுகளால் மனம் வலிமை பெறும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

அதனால் தான் மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்கிறார்கள். மாசி மாதத்தில் தான் சக்தி சிவத்தோடு இணைந்து முழுமை பெறுகிறார். இதனால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிச்சரடை மாற்றிக் கட்டிக் கொள்வர். மாசிக் கயிறு பாசி படியாது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தில் தான் அனைத்து  புண்ணிய நதி, தீர்த்தங்கள், கடற்கரையில் த் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் சைவ, வைணவ திருத்தலங்களில்  மாசி மாதத்தில் கடலாட்டு விழா உற்சவங்கள் கோலாகலமாக நடைபெறும். மாசி மாதத்தில்  பார்வதி தேவி தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கின்றன நமது புராணங்கள்.

சிவபெருமானின் திருவிளையாடல்கள் பல  மாசி மாதத்தில் தான் நிகழ்த்தப்பட்டது. மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் .  மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். மகத்துவம் நிறைந்த மாசி மாத ஏகாதசியில் உயர்படிப்பிற்கான விண்ணப்பங்களை எழுதலாம். தொடங்கலாம். மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அந்த துறையில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை.

மாசி மாதத்தில்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். இதனால்  சகலவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். மாசி மகத்தில் சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்வு பெறலாம்.  இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் முன் ஜென்ம பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளே மாசி மகம்.  இந்த மாசி மக தினத்தில் வழிபாடுகளை மறக்காதீங்க.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.