Russia-Ukraine War: '30 நாள்களுக்கு போர் நிறுத்தம்' - அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முடிவு?
Vikatan March 12, 2025 05:48 PM

'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்', 'கனிம வள ஒப்பந்தம்' - இப்படி பல எதிர்பார்ப்புகளோட நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு படுதோல்வியில் முடித்தது.

சந்திப்பிற்கு பிறகு, 'அமெரிக்கா மிக அதிகமான பணத்தை உக்ரைனுக்காக செலவிட்டு விட்டது. ஆனால், உக்ரைன் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை' என்று ட்ரம்ப் பதிவிட, ஒட்டுமொத்த ஐரோப்ப நாடுகளும் 'உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்' என்று ஜெலன்ஸ்கி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது.

அடுத்த ஒரு வாரத்திலேயே, 'அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயார்' என்று வீடியோ வெளியிட்டார் ஜெலன்ஸ்கி. இந்த நிலையில், நேற்று அமெரிக்கா மற்றும் உக்ரைன் தரப்பினருக்கு இடையே சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது.

ட்ரம்பும், புதினும் நல்ல நண்பர்கள்...

அந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனில் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்கா எடுப்பது, பயன்படுத்துவது சம்பந்தமான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேசப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்ததாக, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த உடனடியாக 30 நாட்கள் உக்ரைன் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கும் உக்ரைன் தரப்பு சம்மதித்துள்ளதாக தெரிய வருகிறது .

தேர்தல் பிரசாரத்தின் போதே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், `நான் வெற்றிபெற்றால் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்’ என்று கூறியிருந்தார். அதற்கான முயற்சிகளையும் எடுக்கத் தான் செய்தார். ஆனால், எதுவும் கைக்கூடவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் 'போர் நிறுத்தத்திற்கு தயார்' என்று வெள்ளைக்கொடி காட்டியிருந்தார். ட்ரம்பும், புதினும் இணக்கமாகவே இருக்கிறார்கள். புதின் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். ட்ரம்பும் மத்தியஸ்தம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். இப்போது தற்காலிகமாக 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைனும் சம்மதித்துவிட்டது. அனைத்தும் கைக்கூடி வரும் இந்த நேரத்தில், போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.