சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முகமதுல்லா ரியாத் ஓய்வை அறிவித்துள்ளார். 39 வயதான நிலையில் மக்முதுல்லா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணியில் இடம் பெற்று விளையாடியிருந்தார். அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இதை அடுத்து மக்முதுல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2024 ம் ஆண்டில் டி20 போட்டிகளில் இருந்தும் முகமதுல்லா ஓய்வு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு 39 வயதாகும் நிலையில் இனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் வங்கதேச அணிக்காக 430 சர்வதேச போட்டிகளில் 11,047 ரன்களும், 166 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அந்த அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். 9 சர்வதேச சதங்களை அடித்து இருக்கிறார்.
மக்முதுல்லா 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2914 ரன்களும், 43 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5689 ரன்கள் மற்றும் 82 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 141 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2444 ரன்கள் மற்றும் 41 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து மக்முதுல்லா ஃபேஸ்புக் பதிவில், "நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன். எல்லாம் கச்சிதமாக முடியாது, சில சமயம் நாம் நமக்கு முன் இருக்கும் கேள்விக்கு ஆம் என்று விடை அளித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும். கடவுளுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.