வங்கதேச ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டதாக இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.
வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் வேறு சில ஜெனரல்களின் ஆதரவுடன் தற்போதைய ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் வகார் உஸ் ஜமானை நீக்க முயன்றதாகவும், ஆனால் போதிய ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியடைந்ததாகவுவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என வங்கதேச ராணுவம் இப்போது நிராகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, வங்கதேசத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரேட் (ISRP) இந்தச் செய்திக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
"இந்தியாவில் உள்ள ஊடகங்கள் சிலவற்றில் வெளியான ஆதாரமற்ற செய்திகள் வங்கதேச ராணுவத்தின் கவனத்திற்கு வந்தது. ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது," என ஐஎஸ்பிஆர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
"இந்தச் செய்தி முழுமையாக ஆதாரமற்றது என்பதுடன் வங்கதேசத்தைச் சீர்குலைப்பதற்காகத் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. வங்கதேச ராணுவம் வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதுடன், தற்போதைய ராணுவத் தளபதியின் தலைமையில் அதன் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கிறது," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"லெப்டினன்ட் ஜெனரல் ரஹ்மான் வங்கதேச ராணுவ உளவுப் பிரிவு டிஜி எஃப்ஐ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வங்கதேசத்தை கவனிப்பவர்கள் சூழ்நிலை பதற்றமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். வங்கதேசத்தில் அடுத்த சில நாட்களில் பெரிய கிளர்ச்சி ஏற்படக்கூடும்."
"அண்மையில் லெப்டினன்ட் ஜெனரல் வங்கதேச ராணுவ தலைமையகத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் தனது வலிமையைப் பரிசோதிக்க முயன்றிருக்கிறார். வங்கதேசத்தில் அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில் ராணுவத்தில் ஒரு கவிழ்ப்பை அரங்கேற்றுவது இந்தக் கூட்டத்தில் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது," என எகனாமிக் டைம்ஸில் குறிப்பிட்டிருந்ததாக அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டது.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி,"இந்தச் சதியில் பல வங்கதேச ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஜெனரல் ஆபீஸர்கள் கமாண்டிங்கின் (GOC) 10 அதிகாரிகளின் பெயர்கள் இதில் வந்துள்ளன. இதில் ஜிஒசியின் 24ஆவது இன்பேண்டரி டிவிஷனை சேர்ந்தவரும் சிட்டகாங் பகுதி கமாண்டருமான மேஜர் ஜெனரல் மிர் முஸ்பிக்குர் ரஹ்மானும் இருக்கிறார்."
"லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு வேண்டும் என ரஹ்மான் விரும்புகிறார். இதைத் தவிர, ஜிஓசி 33 காலாட்படையின் மேஜர் ஜெனரல் அபுல் ஹச்னட் முகமது தாரிக்கும் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஜெனரல் ரஹ்மானை ஆதரிக்கின்றனர்.
"வங்கதேசத்தின் தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் வகார் கொள்கை ரீதியாக மிதவாதியாகக் கருதப்படுகிறார். அவர் இந்தியாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படுவதுடன், வங்கதேசத்தின் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்தும் அரசுக்கும் அவர் எதிரானவராக இருக்கிறார்."
"ஷேக் ஹசீனா பாதுகாப்பாக இந்தியாவை அடைவதை ஜெனரல் வகார் உறுதி செய்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி, இஸ்லாமிய கட்சிகள் தலைமையில் ஒரு கும்பல் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை அடைந்தது. வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ராணுவம் ஒரு பெரிய பங்காற்றக்கூடும் என ஜெனரல் வகார் அண்மையில் உணர்த்தியிருந்தார்" என்று எகனாமிக் டைம்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸின் இந்தக் கூற்றுகள் குறித்துப் பேசிய ராணுவம், "எகனாமிக் டைம்ஸ் இதுபோன்ற தகவல்களைத் தொடர்ச்சியாகப் பரப்பி வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வங்கதேச ராணுவத்தின் உள்ளே இதுபோன்ற எந்த மோதலும் இல்லை," எனக் கூறியுள்ளது.
"இதழியலின் அடிப்படைகளையாவது பின்பற்றுங்கள் என இந்திய ஊடகங்களை வலியுறுத்துவோம். உறுதி செய்யாமல் எந்தப் பரபரப்பான செய்தியையும் வெளியிடுவது ஊடக கொள்கைகளுக்கு எதிரானது."
முன்னதாகக் கடந்த மாதம், ஜெனரல் வகார்-உர்- ஜர்மான் வங்கதேச தலைவர்களை எச்சரித்திருந்தார். அப்போது அவர், "நீங்கள் உங்கள் வேறுபாடுகளைக் களையாமல் தொடர்ந்து உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நமது நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் அபாயத்தில் இருக்கும். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
வங்கதேச நாளிதழான 'பிரதாம் அலோ'விற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அளித்த பேட்டியில் ஜெனரல் வகார் உஸ் ஜமான் இந்தியா குறித்துப் பல விஷயங்களைத் தெரிவித்திருந்தார்.
"இந்தியா ஒரு முக்கியமான அண்டை நாடு, பல விஷயங்களில் நாம் இந்தியாவை சார்ந்திருக்கிறோம். மறுபக்கம், இந்தியாவும் நம்மிடம் இருந்து பல வசதிகளைப் பெறுகிறது. இந்தியாவிலிருந்து பெரிய அளவில் மக்கள் வங்கதேசத்தில் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலிருந்து இந்தத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையுடன், தினக்கூலி வேலைகளையும் செய்கின்றனர்," என்று அவர் கூறியிருந்தார்.
"வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு செல்கின்றனர். நாம் இந்தியாவிடம் இருந்து பல பொருட்களை வாங்குகிறோம். இதைப் போன்ற சூழலில் வங்கதேசத்தின் நிலைத்தன்மையில் இந்தியாவுக்கு அதிக அக்கறை உள்ளது. இருநாடுகளுக்கு இடையில் கொடுக்கல், வாங்கல் உறவு இருக்கிறது. இந்த உறவு சமத்துவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்," என்று ஜெனரல் ஜமன் கூறியுள்ளார்.
"எந்த நாடாக இருந்தாலும் மற்றொரு நாட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும். இதில் ஏதும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இரு நாடுகள் இடையே சமத்துவத்தின் அடிப்படையில் நல்ல உறவுகள் இருக்கின்றன. இந்தியா நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என மக்கள் நினைக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது நமது நலனுக்கு எதிரானதாக இருக்கும்," என ஜெனரல் ஜமன் தெரிவித்திருந்தார்.
இந்தியா, வங்கதேசம் இரண்டும் ஒன்றுக்கொன்று முக்கியமானவை. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைய வேண்டியிருந்தது. அப்போது முதல் இரு நாடுகளுக்கு இடையில் அவநம்பிக்கை அதிகரித்திருப்பதுடன், நம்பிக்கை மீட்டெடுக்கப்படவில்லை.
வங்கதேசம் இந்தியாவால் சூழப்பட்ட நாடாக அழைக்கப்படுகிறது. வங்கதேசம் இந்தியாவுடன் சுமார் 4,367 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதில் 94 விழுக்காடு சர்வதேச எல்லை. அதாவது வங்கதேசம் அனைத்துப் பகுதிகளிலும் இந்தியாவால் சூழப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பின்னர், வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான இஸ்லாமிய பிரிவாகவே பார்க்கப்பட்டது, வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி, முகமது யூனுஸ் அரசை ஆதரிக்கிறது.
பிரதாம் அலோவுக்கு கடந்த மாதம் அளித்த பேட்டியில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சஃபிக்கூர் ரஹ்மான், "1971ஆம் ஆண்டு நமது நிலைப்பாடு, கொள்கை அடிப்படையில் இருந்தது. இந்தியாவின் நலனுக்காக நாம் சுதந்திர நாட்டை விரும்பவில்லை. நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க பாகிஸ்தானிகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என விரும்பினோம்," எனக் கூறினார்.
"நாம் யார் மூலமோ, அல்லது யாருக்கேனும் சாதகமாகவோ சுதந்திரம் பெற்றிருந்தால், அது ஒரு சுமையை நீக்கிவிட்டு மற்றொரு சுமையை சுமப்பதைப் போன்றது. வங்கதேச விவகாரத்தில் கடந்த 53 ஆண்டுகளாக இதை நாம் உணரவில்லையா?
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி பிடிக்கவில்லை என்பதை நாம் ஏன் கேட்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட நாடு விரும்பாவிட்டால், ஒரு குறிப்பிட்ட கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. இது சுதந்திர நாட்டின் அணுகுமுறையா? வங்கதேசத்தின் இளைஞர்கள் இனியும் இதையெல்லாம் கேட்கவிரும்பவில்லை" என்று பேசியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் , , (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)