மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிஷ்(17) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தார். கடந்த ஒரு வருடமாகவே ஹரிஷ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த போது ஹரிஷ் மாடிப்பகுதிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு ஹரிஷின் செல்போன் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஹரிஷ் மாடியில் இருந்து கீழே குதித்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹரிஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஹரிஷ் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி வந்தார். அவரை பெற்றோர் கண்டித்தனர். எனவே ஆன்லைன் விளையாட்டால் எற்பட்ட மன உளைச்சலில் ஹரிஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.