ஆனந்த விகடன்- கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘UPSC, TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற இலவசப் பயிற்சி முகாம், பிப்ரவரி 23-ம் தேதி, திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள லாலி அரங்கில் நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், தனது சிவில் சர்வீஸ் தேர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார், திருச்சி மாவட்ட எஸ்.பி எஸ்.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்.
“சிறுவயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்ததும், ‘யு.பி.எஸ்.சி தேர்வு தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை’ என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றேன். நான் தேர்வானபோது, இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் 10% பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இப்போது அது வெகுவாகக் குறைந்துள்ளது. அதை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும்.
உங்கள் கனவை அடைய Commitment, Consistency, Concentration ஆகிய மூன்று C-க்கள் முக்கியம். அதேபோல், தெளிவான விஷன், மிஷன் இருக்க வேண்டும். செய்திகளை சமூகவலைதளங்களில் தேடாமல், புத்தகங்கள், செய்தித்தாள்களை ஊன்றிப் படிக்க வேண்டும். படிப்பதை அடிக்கடி ரிவிஷன் செய்ய வேண்டும். தினமும் ஐந்து மணி நேரம் படித்தாலும், ஆழமாகப் படிக்க வேண்டும். அதேபோல், உடல், மனது நன்றாக இருக்க ஹாபியும் இருக்க வேண்டும். மனம் ஒருநிலைப்பட உடற்பயிற்சி செய்ய வேண்டும்’’ என்று உற்சாகமூட்டினார். பிறகு, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன், “நாங்கள் இதுவரை நடத்திய பயிற்சி முகாம்களில் இங்குதான் அதிகம் பேர் சிவில் சர்வீஸ் எழுதுவதை லட்சியமாகக் கொண்டு பதிவு செய்துள்ளீர்கள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வு மீது இருக்கும் பயத்தைப் போக்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். குரூப் 1, 2, சிவில் சர்வீஸ் என்று எல்லாத் தேர்வுகளுக்கும் நீங்கள் படிக்க வேண்டும். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய தேர்வை நினைத்துப் படித்தால், மற்ற தேர்வுகளில் எளிதாக பாஸ் செய்துவிடலாம். நான் இப்படிப் படித்ததால் ஏழு தேர்வுகளில் வெற்றி பெற்றேன்...” என்றார்.
முன்னதாக அரங்கில் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சிக் கையேடு, பொது அறிவு நூல் வழங்கப்பட்டது.