நாளை காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இளம்பெண்கள் விரைவில் திருமண வரம் கைக்கூடவும், நல்ல வரன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் தாலி பலம் கூடவும், சுமங்கலி வரம் கிடைக்கவும் விரதமிருக்க வாய்த்திருக்கிற அற்புதமான பண்டிகை காரடையான் நோன்பு.
கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியதிற்காக சுமங்கலி பெண்கள் இருக்கும் விரதங்களில் மிக முக்கியமான விரதமாக காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். கௌரி விரதம், காமாட்சி நோன்பு எனவும் இந்த விரதத்தைக் குறிப்பிடுகிறார்கள். சாவித்திரி தன்னுடைய தவ வலிமையால் தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை எடுத்து சென்ற எமனுடன் போராடி மீட்டாள் என்கிற புராணக் கதை அனைவருக்கும் தெரியும் தானே. அப்படி சாவித்திரி இருந்த விரதம் தான் காரடையான் நோன்பு.
இந்த தினத்தில் சத்தியவான் சாவித்திரி சரிதம் படிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கணவன் உயிரை திருப்பி கொடுத்த எமனுக்கு சாவித்திரி தன் பக்தியை நிரூபிக்க உருகாத வெண்ணெயால் செய்யப்பட்ட கார அடையை காணிக்கையாக படைத்தாள்.
கார் என்றால் கருமை. அடையான் என்றால் அடைந்தவன். கருமையான இருள் சூழ்ந்த யம லோகத்தை அடையாதவன் என்பதால் காரடையான் நோன்பு என்ற பெயர் ஏற்பட்டது.
கன்னிப் பெண்களுக்கு விரைவில் மாங்கல்ய பாக்கியம் பெறவும், சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனிதநீரில் நீராட வேண்டும். வாசலில் காவி பூசி கோலமிட வேண்டும். பூஜையறையிலும் கோலமிட்டு நித்திய பூஜைகளை செய்ய வேண்டும். பராசக்தியை நினைத்து இந்த நோன்பை அனுஷ்டிக்கலாம். நாளை மார்ச் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மேல், 6 மணிக்குள்ளாக தாலி சரடை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.
கணவனின் கையால் புதிய சரடை கட்டிக் கொள்ளலாம். தங்கத்தால் தாலி சரடு அணிந்திருப்பவர்களும் கணவரின் நீண்ட ஆயுளுக்காக சிறிது மஞ்சள் கயிற்றையும் கோர்த்து அணிந்து கொள்ளலாம். மாசி சரடு பாசி படியும் என்பது முதுமொழி. மாசி மாதத்தில் அணியும் உங்களுடைய மாங்கல்ய சரடு பாசி படியும் வரை நீடிக்கும். இந்த நாளில் உமையவளுக்கு விரதமிருந்து, கார அடை செய்து படைத்து வழிபாடு செய்திட, வேண்டிய வரம் அருள்வாள் அன்னை பராசக்தி.
இந்த விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம்
நாளை மார்ச் 14ம் தேதி சூரிய உதயம் காலை 6.40-க்கு தொடங்குகிறது. அது போல் மாலை சூரிய அஸ்தமனம் 6.31 மணிக்கு மறைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் பூஜை செய்து வழிபடலாம். மேலும் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக தாலி சரடை மாற்றலாம். நோன்பு கயிறையும் கட்டிக் கொள்ளலாம்.