'காற்றோடு குழலின் நாதமே...’ - ’கோடை மழை’ படத்துல வர்ற இந்தப் பாட்டு இன்னிக்கு வரைக்கும் பலரோட ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கு. அந்த அளவுக்கு லிரிக்ஸ், மியூசிக்னு ஒரு மேஜிக்கே பண்ணியிருக்கும். கூடவே இந்தப் பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுற வித்யாவோட பாதங்கள்ல ஆரம்பிச்சு புருவங்கள் வரைக்கும் பரதமாடும்.
சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களைத் தெரியப்படுத்துற இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ்ல, இந்த வாரம், நடிகை கோடை மழை வித்யா.
கோடை மழை வித்யாவின் அப்பா வேணுகோபால் மருத்துவத்துறையில் வேலை பார்த்துகிட்டிருந்ததால, அவருக்கு ஆந்திரா, தமிழ்நாடுனு பல மாநிலங்கள்ல வேலைபார்க்க வேண்டிய சூழல். ஸோ, அவர் கூடவே அவர் மனைவி புவனேஸ்வரியும் மகள் சுனிதாவும் பயணப்பட வேண்டிய சூழல் ஆமாங்க கோடை மழை வித்யாவோட நிஜப்பெயர் சுனிதா.
சுனிதாவுக்கு, அதாவது கோடை மழை வித்யாவுக்கு டான்ஸ்ல ரொம்ப ஆர்வம் இருந்திருக்கு. மூணு வயசுலயே ஏதாவது ஒரு பாட்டு கேட்டா டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவாங்களாம். அவங்க அப்பாவோட வேலை காரணமா வித்யாவோட குடும்பம் சென்னையில செட்டிலான உடனே, மிகப் பிரபலமான நாட்டியக்குருவான வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் மகனான வழுவூர் ஆர். சாம்ராஜ் நடத்திட்டு வந்த டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்து விட்டிருக்காங்க.
ஏற்கனவே நாட்டியத்துல ஆர்வமா இருந்த வித்யா ரொம்ப சீக்கிரமா பரதத்துல தேர்ச்சிப் பெற ஆரம்பிச்சிருக்காங்க. 11 வயசிலேயே பரதநாட்டிய அரங்கேற்றமும் நடந்திருக்கு. சென்னையில நடந்த அந்த அரங்கேற்றத்துக்கு சினிமா ஃபீல்டை சேர்ந்த பலரும் வந்திருக்காங்க. அந்த நேரத்துல பரதநாட்டியத்தை மையமா வெச்சு ’கோடை மழை’ன்னு ஒரு படம் தயாரிக்கணும்கிற ஐடியாவில் இருந்த படக்குழுவினரும் அந்த அரங்கேற்றத்துக்கு வர, திருத்தமான முகம், பரதநாட்டியத்துல நல்ல திறமையா இருக்கிற இந்தப் பொண்ணையே அந்தப் படத்துல நடிக்க வைக்கலாம்னு முடிவெடுத்துட்டாங்க.
முடியவே முடியாதுன்னு மறுத்திருக்காங்க.இதுதொடர்பா, வித்யாவோட பெற்றோரை மீட் பண்ண அவங்க முடியவே முடியாதுன்னு ஒரேடியா மறுத்திருக்காங்க. ஆனா, கோடை மழை டீம் படத்தோட கதையைச் சொல்லி நடனம்தான் அதோட அடிப்படையின்னு எடுத்துச்சொன்னதும் அரைகுறை மனசோட இந்த ஒரேயொரு படத்துல மட்டும் வித்யா நடிக்கட்டும்கிற முடிவுக்கு வந்திருக்கிறாங்க. 1986-ல் கோடை மழை படம் வெளி வந்துச்சு. வித்யாவுக்கு அம்மாவா பிரபல நடிகை லட்சுமி நடித்திருப்பாங்க. நாட்டியம் சொல்லித்தர குருவா நடிகை ஸ்ரீபிரியாவும், அவரோட கணவரா ஜெய்சங்கரும் நடிச்சிருப்பாங்க.
முதல் படத்துலேயே சீனியர் மோஸ்ட் நடிகர்களுடன் நடிக்கிற வாய்ப்பு வித்யாவுக்குக் கிடைச்சிது. அம்மா காலமான பிறகு அண்ணனோட தயவுல வாழுற ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணு, அண்ணியோட கொடுமையால் எப்படியெல்லாம் கஷ்டப்படுறா; அதையெல்லாம் தாண்டி எப்படி தன்னோட பரதநாட்டிய கனவுல சக்சஸ் அடையறா அப்படிங்கறதுதான் கோடை மழை படத்தோட கதை. படத்துல சில காட்சிகள்ல வித்யா கண் தெரியாம நடிச்சிருப்பாங்க. நடிப்பு, டான்ஸ் ரெண்டுலயும் முதல் படத்திலேயே சூப்பரா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க வித்யா. இப்படியொரு திறமைசாலி நடிகையை தமிழ் சினிமா விட்டுடுமா என்ன..?
விஜயகாந்துடன் ’உழைத்து வாழ வேண்டும்’ படத்துல விஜயகாந்த்தோட தங்கச்சியா பூ விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருப்பார் வித்யா. ’பொன்மனச்செல்வன்’ படத்துல ஜெமினி கணேசன் சரோஜாதேவி மகளா நடிச்சிருப்பார். லப்பர் பந்து படத்தோட வெற்றிக்கப்புறம் 2கே கிட்ஸ்க்கு மத்தியில பெரிய அளவுல ஹிட்டான ’நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்’ பாட்டு பொன்மனச்செல்வன் படத்துல வந்ததுதான். இந்த பாட்டுல வித்யாவும் டான்ஸ் ஆடி இருப்பார்.
பாண்டியராஜனோட தங்கையா ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ படத்துலயும் வித்யாவோட பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். முதல் படம் ’கோடை மழை’ போலவே இந்தப் படத்திலும் மொத்த கதையும் வித்யாவை சுற்றியே நகரும். பாசமான தங்கச்சி, தான் காதலிச்சவன் கெட்டவனில்ல நல்லவன்தான் தெரிஞ்சுக்கிற இடம்னு வித்யா ஸ்கோர் பண்றதுக்கு எக்கச்சக்க சீன்கள் இந்தப் படத்துல இருந்துச்சு. அதை வித்யாவும் நல்லா யூஸ் பண்ணியிருப்பாங்க.
அவங்க முகத்துல இருந்த அப்பாவித்தனம்தான்...வித்யாவோட நடிப்புல இன்னொரு நல்ல படம் ’வரவு நல்ல உறவு.’ விசுவுக்கு மகளாக நடிச்சிருப்பாங்க. இந்தப் படத்துல அப்பாவி அப்பா, பணத்தாசைப் பிடிச்ச அண்ணன்கள் மத்தியில தன்னோட வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துகிற ஒரு கேரக்டர்ல நடிச்சிருப்பார். அந்தப் படத்தோட ஹீரோயினுக்கு சமமான கேரக்டர் வித்யாவோடது. ரொம்ப இலகுவா அந்த கேரக்டர்ல தன்னைப் பொருத்தியிருப்பாங்க. அவங்க முகத்துல இருந்த அப்பாவித்தனம்தான் அந்த கேரக்டரை இன்னிக்கு வரைக்கும் பலரோட ஞாபகத்துல வெச்சிருக்குன்னு தாராளமா சொல்லலாம். சத்யராஜுக்கு தங்கச்சியா திராவிடன், அர்ஜுனுடன் அடிமைச்சங்கிலினு நடிச்சவர், அதுக்கப்புறம் மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு பிசியாகிட்டார்.
தூர்தர்ஷன்ல 1996-ம் ஆண்டு கலைஞரோட கதை, வசனத்துல வெளிவந்த ‘தென்பாண்டி சிங்கம்’ தொடர்ல, நாயகன் வாளுக்கு வேலியா நடிகர் நாசர் நடிக்க, அவருக்கு ஜோடியா கீதா நடிச்சிருப்பாங்க. வில்லி கேரக்டர்ல கோடை மழை வித்யா ச்சும்மா துவம்சம் செஞ்சுருப்பாங்க. அந்த சீரியல்லேயும் வித்யாவுக்கு டான்சர் கேரக்டர்தான்.
இதுக்கப்புறம் ராஜ் என்பவரை திருமணம் செஞ்சுக்கிட்டு கணவரோட அமெரிக்காவுல செட்டில் ஆனவங்க, இப்ப அங்கேயே பரதநாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. ஷஷாங்க் அப்படிங்கிற ஒரு பையன் வித்யாவுக்கு இருக்கார்.
கோடை மழை வித்யா பெரும்பாலும் தங்கை கேரக்டர்ஸ் தான் செஞ்சிருப்பார். அதுக்கு காரணம் என்னவா இருக்கும்..? அவரோட பேட்டி ஒண்ணுல இதுக்கான பதில் இருக்கு. ‘என் படத்துல நடிச்சா நிறைய பணம் தரேன்னு ஒரு டைரக்டர் சொல்றார். இன்னொரு டைரக்டர் நல்ல கேரக்டர் தரேன்னு சொல்றார். ரெண்டுல ஏதோ ஒத்துப்பீங்கன்னு கேட்டா, நான் கேரக்டர் ரோல்தான் ஒத்துப்பேன். பணம் இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். ஆனா, சினிமாவுல நல்ல கேரக்டர் ரோல் எப்பவாச்சும்தான் கிடைக்கும். அதனால, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்’ அந்தப் பேட்டியில சொல்லியிருப்பாங்க வித்யா.
அஃப்கோர்ஸ் அவங்களோட இந்த குணத்தினால்தான் ரொம்ப செலக்ட்டிவா கேரக்டர்கள்ல நடிச்சாங்க போல. அதே பேட்டியில 'தமிழ்ல எனக்கு உருக்கமான கதாபாத்திரங்கள் கிடைக்கவே இல்லை’ன்னு வருத்தத்தோட குறிப்பிட்டிருப்பாங்க. உருக்கமான கேரக்டர்ஸ் கிடைக்கலைன்னு வருத்தப்படுற கோடை மழை வித்யா, தமிழ்ல செகண்ட் இன்னிங்ஸ் வர வாழ்த்துகள்.!
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK