சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி விளக்கு பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
Vikatan March 15, 2025 01:48 AM

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மன் தரிசனம் செய்துவருகின்றனர். இது திருவிழா காலம் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்கினிச்சட்டி, ஆயிரங்கண் பானை, மா விளக்கு உள்ளிட்ட தங்களது வேண்டுதல் மற்றும் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

மேலும், இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாசி மாதம் கடைசி பௌர்ணமி தினத்தையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண் பக்தர்கள் அம்மனுக்கு விளக்கு ஏற்றி அம்மன் துதிபாடல்கள் பாடி பக்தியுடன் பூஜை செய்து வழிபட்டனர்.

மாரியம்மன்

பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு விளக்கு, பூஜை பொருட்கள் மற்றும் பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டன. முன்னதாக பௌர்ணமி தினச் சிறப்பு அபிஷேகம் அம்மனுக்கு நடைபெற்றது. இதில், பால், பன்னீர், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட 24 வகை வாசனை மற்றும் திவ்ய பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த இருக்கன்குடி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் இணையதளம் வழியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.