9 மாத காத்திருப்பு..! சுனிதா, வில்மோரை அழைத்து வர விண்ணில் பாய்ந்த 'பால்கன் - 9'..!
Newstm Tamil March 15, 2025 04:48 PM

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.

எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

இதனால், எட்டு நாட்களுக்கான பயணம் நீடித்தது. தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக, சில தினங்களுக்கு முன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட்டை செலுத்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில், 'பால்கன் - 9' ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 15) புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:33 மணிக்கு, ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விரைவில், விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா, வில்மோர் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.