ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த 37 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். அந்த நபர் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது இரண்டு மகன்களின் கல்வி திறமை குறைவாக இருந்ததை எண்ணி அந்த நபர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி வெளியே சென்ற பிறகு அவர் இரண்டு மகன்களையும் தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு மன உளைச்சலில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த மனைவி தனது கணவர் தூக்கில் சடலமாகவும், 2 பிள்ளைகள் தண்ணீர் வாளியில் மூழ்கடித்தும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது மகன்கள் எதிர்காலத்தில் போட்டி நிறைந்த இந்த உலகில் போராட வேண்டி வரும். அதனால் இந்த கடினமான முடிவை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.