உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தின் முதலாளி சுமித். இவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவர்களுடைய குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார் .
இந்நிலையில் இளம் பெண்ணை தவறாக பலமுறை சுமித் என்பவர் அணுக முயன்றதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதி அனுப்ஷாஹர் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சுமித் அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்று கொடுமையாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின் அந்த பெண்ணை ஈ ரிக்ஷாவில் வீட்டிற்கு அனுப்பி நள்ளிரவில் வீட்டு அருகே தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் வீட்டிற்கு சென்றவுடன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் பின் குளியல் அறைக்கு சென்ற பின்னர் அவர் மயங்கி கீழே விழுந்ததால் அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மேம்படாததால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரின் குடும்பத்தினர் சுமித்திடம் எதிர்த்து கேட்டபோது அவர் “வெளியே சொன்னால் உங்களை கொன்று விடுவேன்” என்று மிரட்டி உள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் சுமித்தை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் உண்மையான நிலைமை வெளிச்சத்துக்கு வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.