சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் நடந்து சென்ற சிறுமியைக் காப்பாற்ற, அந்த சிறுமியின் தாய் தனது உயிரையே பணயம் வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலையில் நின்றிருந்த மாடு, திடீரென அந்த சிறுமியை நோக்கி பாய்ந்தது. இதைக் கவனித்த தாய், தன் மகளை பாதுகாக்க சாலையின் மறுபுறம் இழுத்துச் சென்றார். ஆனால், தாயின் பின்புறம் சென்ற மாடு, அவரை முட்டி தூக்கி வீசியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாட்டை விரட்டி அடித்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.