இண்டஸ்இண்ட் வங்கியில் உங்க பணம் பத்திரமா இருக்கு.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
ET Tamil March 16, 2025 12:48 AM
மார்ச் 15, இன்று இண்டஸ்இண்ட் வங்கி தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வங்கி முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு நல்ல செய்தி கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கியில் போதுமான மூலதனம் இருப்பதாகவும், வங்கியின் நிதி நிலையும் நிலையாக இருப்பதாகவும் கூறியுள்ளது.நடப்பு காலாண்டில் வங்கியின் நிதி நிலையில் கண்டறியப்பட்ட ரூ.2,100 கோடி முறைகேட்டை சரிசெய்யும் பணியில் வங்கி ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த வாரம் இண்டஸ்இண்ட் வங்கிப் பங்குகள் பலத்த அடி வாங்கின.ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், இண்டஸ்இண்ட் வங்கி ஏற்கனவே ஒரு வெளிப்புற தணிக்கைக் குழுவை நியமித்துள்ளதாகவும், இது வங்கியின் தற்போதைய நிதி அமைப்பை முழுமையாக மதிப்பாய்வு செய்யும் எனவும் கூறியுள்ளது. மேலும் உண்மையான நிதி நிலையை மதிப்பிட்ட பிறகு ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்!2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4FY25) முழுமையான திருத்த நடவடிக்கை எடுக்கவும், அனைத்து பங்குதாரர்களுக்கும் தேவையான வெளிப்படுத்தல்களை வழங்கவும் வங்கியின் வாரியம் மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இது தவிர, வங்கியின் நிதி நிலை நிலையானதாக இருப்பதாலும், மத்திய வங்கி அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாலும், இந்த விவகாரம் தொடர்பாக பரவும் ஊகங்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று பொது மக்களிடமும் வைப்புத்தொகையாளர்களிடமும் ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.இண்டஸ்இண்ட் வங்கியின் கணக்கு மோசடிகள் குறித்துசெப்டம்பர்-அக்டோபர் 2024 -இல் தெரிய வந்தததாகவும், கடந்த வாரம்தான் இது குறித்த முதற்கட்ட தகவலை ரிசர்வ் வங்கிக்கு வங்கி வழங்கியதாகவும் இண்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியால் நியமிக்கப்பட்ட வெளிப்புற நிறுவனம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன் பிறகு உண்மையான நிலைமை தெளிவாகும்.அதனைத்தொடர்ந்து வங்கியின் நிதி நிலை குறித்த தகவல்களையும் ரிசர்வ் வங்கி பகிர்ந்து கொண்டது, மேலும் வங்கியின் மூலதன விகிதம் 16.46% என்றும், ஒதுக்கீடு பாதுகாப்பு விகிதம் 70.20% இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து வங்கியின் பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (LCR) 113% ஆகும், இது ஒழுங்குமுறை தேவையான அளவைவிட 100% ஐ விட அதிகமாகும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.