திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனது தங்கை பூவாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சிவசந்திரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். இந்த நிலையில் சிவசந்திரன் கலச பூஜை செய்தால் குடும்ப நலன் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி வள்ளியம்மாளும் அவரது தங்கை பூவாத்தாளும் பூஜையில் பங்கேற்றனர். இதனையடுத்து சிவசந்திரன் கூறியபடி இருவரும் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த கலசத்திற்குள் போட்டனர்.
அதற்கு மாற்றாக சிவசந்திரன் வேறு சங்கிலிகளை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிவசந்திரன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார். இரண்டு மாதங்கள் கழித்து சிவசந்திரன் கொடுத்த தங்க சங்கிலிகள் நிறம் மாறி இருப்பதை அறிந்த வள்ளியம்மாளும், பூவாத்தாளும் அதனை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிவசந்திரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் மோசடி செய்த 12 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.