ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினால், ஏதுமறியா பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரை சேர்ந்த 35 வயதான குமார் தனியார் நிறுவனமொன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டிச் செல்வி(24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் இருந்தன. பாண்டிச் செல்வியின் நடத்தையில் குமாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே
அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், இரண்டு ஆண் குழந்தைகளையும் அழைத்து கொண்டு பாண்டிச்செல்வி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வீட்டில் மற்றொரு ஒன்றரை வயது குழந்தை தீபா ஸ்ரீ தொட்டிலில் தூங்கி உள்ளது. அப்போது வீட்டில் இருந்த குமார் மனைவியின் மீது இருந்த கோபத்தில் தொட்டிலில் இருந்த குழந்தையை வேகமாக சுவற்றில் மோதி உள்ளார். இதில் குழந்தை சுயநினைவு இழந்து மயங்கியது.
குழந்தையை சுவற்றில் மோதி கொன்றுவிட்டு தந்தை குமார் ஏதும் தெரியாதது போல் நாடகம் ஆடி உள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பாண்டிச்செல்வி மயங்கி கிடந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி உள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த பாண்டிச்செல்வி இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் குழந்தையை கொன்றதாக குமார் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து குமாரை கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..