தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. குறித்த சோதனைகளில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அவர்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர்கள், பெண்கள் உள்பட அக்கட்சி தொண்டர்கள் மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் விடுவிக்க படாமல் இருந்ததால் பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதனால், அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது, 06 மணிக்குமேல் ஆகியும் விடுதலை செய்யாததால் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மயங்கி விழ, அவரை தமிழிசை மருத்துவமனைக்கு அனுப்பி வை.த்தார்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், 06 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு. நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்னை வேண்டுமானால் கைது செய்துகொள்ளுங்கள். ஆனால், என்னுடன் வந்த கட்சி பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.