உத்தரகண்ட் மாநிலத்தில் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகண்டில் பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும், மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
பின்னர் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை பிரேம்சந்த் வழங்கினார்.
பதவி விலகும் போது, எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என பிரேம்சந்த் கூறினார். செய்தியாளர்களிடம் நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்.மாநில முன்னேற்றத்திற்காக உதவுவதற்கு நான் எந்த வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.