உத்தரப்பிரதேசம் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று மாலை 4.30 மணியளவில், 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், காக்கி உடை அணிந்து கிராமத்திற்குள் புகுந்து தலித் சமூகத்தினரை பயங்கரமாக தாக்கியது.
இந்த தாக்குதலில் 6 மாத குழந்தை மற்றும் 2 வயது குழந்தை உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நவம்பர் 19 அன்று, லயிக் சிங் என்பவர் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்தார்.
இந்த தலித் படுகொலைச் சம்பவத்தின் போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார். அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய், தெஹுலியிலிருந்து ஃபிரோசாபாத் வரை பாதயாத்திரை மேற்கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் 17 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீண்டகாலம் நடைபெற்ற நிலையில், 14 பேர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்தனர், ஒருவர் தலைமறைவாகியதாக அறிவிக்கப்பட்டார்.
நீண்ட விசாரணைக்கு பின்னர், கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் சந்தோஷ், ராதே மற்றும் மற்றைய குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
44 ஆண்டுகளுக்குப் பிறகு, உ.பி. மைன்புரி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கப்தான் சிங் (60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தலா ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.