கோப்பையை வெல்வது முக்கியம்.. அதில் எந்த அழுத்தமும் இல்லை - பஞ்சாப் அணி கேப்டன்.!
Seithipunal Tamil March 19, 2025 09:48 AM

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்ததாவது:

வருகின்ற ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிந்திருப்போம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடமாகத்தான் இருக்கும்.

இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன். நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால், நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.

அவருடன் பணிபுரிவது நன்றாக உள்ளது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். வெற்றி பெறவும் விரும்புகிறார். கோப்பையை வெல்வதே முக்கியம். அதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு சரியான வாய்ப்பு" என்றுத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.