குட் நியூஸ்..! விரைவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு..!
Newstm Tamil March 19, 2025 12:48 PM

வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், ஆதார் அடையாள அட்டை எண்ணும் விரைவில் இணைக்கப்பட உள்ளன.
 

இதுகுறித்து, நிருபர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 326வது பிரிவின் படி, இந்திய குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழலில், ஆதார் அடையாள அட்டை தான், அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆதார் அடையாள எண் ஆணையம், தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் தக்க முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

சில நாட்களுக்கு முன், பார்லிமென்டில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண்கள், பல மாநிலங்களில் ஒரே மாதிரியாக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.இதற்கிடையே, நேற்று நடந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் விரைவில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 

முன்னதாக, 2015 பிப்ரவரியில், பல மாநிலங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்களை, ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி துவங்கியது.'அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்ட உச்ச நீதிமன்றம், 'ஆதார் அடையாள அட்டையை, அரசுகளின் நலத்திட்டம் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.