Khalistan: இந்திரா காந்தி டு மோடி; அச்சுறுத்தும் காலிஸ்தான் விவகாரம் - விரிவான அலசல்
Vikatan March 19, 2025 03:48 PM

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் லண்டன் சென்றிருந்தார். அங்கே அவர் காரில் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு மர்ம நபர் காருக்கு குறுக்கே பாய்கிறார். என்ன நடக்கிறதென புரியாமல் அனைவரும் இருக்க நொடிப்பொழுதில் இந்திய தேசியக் கொடியை கையிலெடுத்து கிழித்து அவமதிப்பு செய்து விடுகிறார். விசாரணையில் அவர் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் எனத் தெரியவந்தது. ஜெய்சங்கரின் காரை மர்மநபர் மறித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மோடி - நியூசிலாந்து பிரதமர்

அதேபோல தற்போது இந்தியாவிற்கு வந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனிடம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சில காலிஸ்தானி ஆதரவு சக்திகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்திருக்கிறார். தவிர நேற்று அமெரிக்காவின் தேசிய உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட்டிடம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் காலிஸ்தான் இயக்கத்தை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இந்திய அரசுக்குத் தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் பின்னணி என்ன? அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன?

தனி நாடு கோரிக்கை

1984 அக்டோபர் 31 காலை 9 மணி

இந்திரா காந்தி வழக்கம் போல தன்னுடைய இல்லத்திலிருந்து அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது பாதுகாவலர்களே அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். சீக்கிய மதத்தைச் சேர்ந்த சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற அந்த இரண்டு பாதுகாவலர்களும் இந்த அதிரடி முடிவை எடுக்கக் காரணம் இந்திராவின் ஆட்சியில் நடத்தப்பட்ட 'ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்'தான்.

இந்திரா காந்தி

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன் மகாராஜா ரஞ்சித் சிங்கால் உருவாக்கப்பட்ட சீக்கியப் பேரரசு பஞ்சாப்பை ஆண்டு கொண்டிருந்தது. பாகிஸ்தானின் தற்போதைய பஞ்சாப் மாநிலமும்,  இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளும் சீக்கியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கான தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் எழுந்தபோது அந்தப் பகுதியில் வாழும் சீக்கியர்களின் நிலை குறித்து கவலை எழுந்தது. அதைக் தொடர்ந்து பஞ்சாப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து ‘காலிஸ்தான்’ என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை சீக்கியர்களின் மத்தியில் உயிர் பெற்றது.

ரத்தச் சுவடுகளுடன் முடிந்த இந்தியா- பாகிஸ்தான் போராட்டத்தில் சீக்கியர்களும் ரத்தம் சிந்தினர். அகதிகளாக இந்தியா திரும்பிய ஹிந்துக்களுடன் லட்சக்கணக்கான சீக்கியர்களும் பஞ்சாப் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். இதனால்தான் இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் போலவே சீக்கியர்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என முடிவெடுத்தனர். இந்தியாவில் உள்ள பஞ்சாப்பையும்,  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபையும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து தனி நாடு அமைக்கவேண்டும் என்று சீக்கிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னாளில் அதுவே காலிஸ்தான் என்ற பெயரில் போராட்டமாக வெடிக்கத் தொடங்கியது.

நேரு நேருவின் அறிவிப்பு

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் 1946ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ஜவஹர்லால் நேரு,`சீக்கியர்களுக்கான உரிமைகளைப் பாதிக்காத வண்ணம், சீக்கிய மக்களே தங்களின் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் கொண்டிருப்பார்கள்’ என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்திய விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து பெரும்பாலான சீக்கியர்கள், இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேச பகுதிகளில் குடியேறினர். ஆனால் அதன் பிறகு  நேரு, ’ஒருங்கிணைந்த இந்தியாவின் நலன்களைக் கருத்தில்கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும்’ என அறிவித்தார். இது, சீக்கியர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதனால், சீக்கியர்களுக்கான தனி நாடு, ’காலிஸ்தான்’ என்ற முழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.

அகாலி தளத்தின் தலையீடு

சீக்கிய மதத்தையும், சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென 1920-ல் சிரோமணி குருத்துவாரா பிரபந்த செயற்குழுவால் ஆரம்பிக்கப்பட்ட அகாலி தளக் கட்சி, 1956-ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சீக்கியர்களை ஒன்றிணைத்துத் தனி மாநிலம் வேண்டும் எனப் போராடியது. ஆரம்பக்காலங்களில் மத்திய அரசு இதை நிராகரித்தாலும், அதன் பிறகு நடந்த வன்முறைகளாலும், தொடர் போராட்டங்களாலும் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து சீக்கியர்களுக்காகப் பஞ்சாப் மாநிலம் மத்திய அரசால் ஒதுக்கித் தரப்பட்டது. ஆனாலும் அதில் தங்களுக்கான முழுமையான கோரிக்கைகள் நிறைவேறவில்லை என சீக்கியர்களைத் அதிருப்தியடைந்தனர். இதனால், 1970 இல் இந்த பிரச்னை மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. 1970களில் காலிஸ்தான் தனிநாடு குறித்த கோரிக்கையை இங்கிலாந்திலிருந்து வந்த சரண் சிங் பான்சி, ஜககித் சிங் சௌஹான் போன்ற சில சீக்கியத் தலைவர்கள் அழுத்தமாக முன்வைத்தனர்.

ஜகஜீத் சிங் செளஹான் காலிஸ்தான் இயக்கத்தை நிறுவிய ஜகஜீத் சிங் செளஹான்

இதையடுத்து, 1971இல் ஜகஜீத் சிங் சௌஹான் என்பவர் அமெரிக்கா சென்று தனி காலிஸ்தான் நிறுவப்போவதாக பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறார். அதனடிப்படையில், உலக நாடுகளில் வசித்த சீக்கியர்கள் அவருக்கு நிதியுதவி செய்தனர். அதன்பிறகு, 1980இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து காலிஸ்தான் தனி நாடாக வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். அதற்கு முன்பே, பஞ்சாபின் ஆனந்த்பூர் சாகிப்பில், காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பைத் தொடங்கி, தனி நாட்டுக்கான அஞ்சல் தலைகளையும் செலாவணிகளையும் வெளியிட்டார்.

அதிகாரப்பூரவமாக தோற்றுவிக்கப்பட்ட காலிஸ்தான் இயக்கம்

இதைத் தொடர்ந்து 1980களில், இந்த இயக்கம் ஒரு பெரிய பிரிவினைவாத இயக்கமாக உருவெடுத்தது. குறிப்பாக, பஞ்சாபிற்கு தனி தேசம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வன்முறைப் போராட்டங்களாக வெடிக்கத் தொடங்கின. இன்னும் சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டு காலிஸ்தான் என்ற இயக்கம், ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவால் அதிகாரபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. அவர் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.  

'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற அதிரடித் தாக்குதல்

இந்த சூழ்நிலையில்தான், 1984ஆம் ஆண்டு 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற அதிரடித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே-வும், அவரின் ஆதரவாளர்களும் பெருமளவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, தலைமறைவாக இருந்தனர். அதுவரை இல்லாத நடைமுறையாக இந்திய ராணுவத்தினர், பொற்கோயிலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது நடந்த தாக்குதலில் பிந்த்ரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிட்டது. இது சீக்கியர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திமீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. பெரும்பான்மையான சீக்கிய மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே இந்தத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதும், சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்பட்ட பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாலும்  இந்திராகாந்தியை சத்வந்த் சிங், பியாந்த் சிங் இருவரும் சுட்டுக் கொன்றனர். 

முடிவுக்கு வந்த காலிஸ்தான் கிளர்ச்சி

இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, காலிஸ்தானிகளின் போராட்டம் உச்சத்தை அடைந்தது. இதன்பிறகு 1992இல் ஆட்சிக்கு வந்த பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங், காலிஸ்தான் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டார். இதையடுத்து, 1995இல் பஞ்சாப்பில் காலிஸ்தான் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் மீண்டும் காலிஸ்தானுக்கான கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். 

குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த குர்பத்வந்த் சிங் பன்னூன்

அதன்பேரில் குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர், 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் `நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கினார். அதேநேரத்தில் இந்தக் குழு மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. 2019 முதல் பஞ்சாப் தவிர, நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக, காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், NIA அமைப்பால் தேடப்பட்டு வருகிறார். ஆனாலும், குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு பிரசாரத்தைத் தொடங்கினார். ஆனால் சர்வதேச அளவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

புதிதாக துவங்கப்பட்ட வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பு

2021-ல் விவசாயிகள் போராட்டத்துக்குப் பெரிதும் ஆதரவளித்த தீப் சிங் சித்து எனும் நடிகர், 2021 செப்டம்பர் மாதம் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையுடன் பஞ்சாப்பின் வாரிசுகள் என்ற அர்த்தத்தில்  வாரிஸ் பஞ்சாப் டி (Waris Punjab De) எனும் அரசியல் இயக்கத்தை நிறுவினார். ஆனால்,15 பிப்ரவரி 2022 அன்று தீப் சிங் சித்து ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, துபாயில் வேலை செய்து வந்த அம்ரித்பால் சிங், இந்தியா வந்து வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. தன்னைத் தானே மத போதகர் என அழைத்துக்கொள்ளும் அம்ரித்பால் சிங், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தன் கூட்டாளி லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை ஆயுதம் தாங்கிய தன் குழுவுடன் முற்றுகையிட்டு அவரை மீட்டார். அதிலிருந்து மக்களிடம் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இதன் காரணமாகவே அவர்மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பு

இந்த நிலையில்தான் இவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த இந்திய அரசிடமிருந்து தலைமறைவாக இருந்தார். இந்தச் சூழலில், தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் சரணடைந்தார். அப்போது, அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவருடன், மேலும் 9 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அசாம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவரைக் கைதுசெய்யக் கூடாது என்ற கோரிக்கையுடனும், தனிநாடு கோரிக்கையுடனும் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து, 3-ஆவதாக காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்தார். இந்தக் கொலைக்குப் பிறகே கனடா - இந்தியா உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது. இந்தியாவில் இருந்த கனட அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்தும் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது இந்திய அரசு. இந்தப் பிரச்னைக்குப் பிறகு அதிதீவிரமாக தனிநாடு கோரிக்கையுடன் காலிஸ்தான் அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

காலிஸ்தான்

'காலிஸ்தான்' குரல் வலுப்பெறுவது, இந்தியாவை துண்டாட உதவும் என மத்திய அரசு அஞ்சுகிறது. அது குறித்து தொடர்ந்து தங்களின் கண்டனத்தையும் அந்த அமைப்பை ஒடுக்குவதற்கான வேலைகள் குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.